ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்தது.
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போயஸ் இல்ல பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலா உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கடந்த மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவர்களும் விளக்கம் அளித்தார். சசிகலா தரப்பும் தன்னுடைய விசாரணையை நிறைவு செய்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டுமென அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, ஆணையத்தில் மனு அளித்தார்.
புகழேந்தி மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு தெரியாமல் எதுவும் இருக்காது, எனவே அவரை விசாரிக்க வேண்டும் என ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளேன் என்றார். ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்லாலதது தான் அவர் மறைவுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்கிற புகழேந்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்தன. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.







