ஓ.பன்னீர் செல்வம் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயகுமார், சேலம் பெரியார் பல்கலை விவகாரம்…? இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஜாதிய கண்ணோட்டத்துடன், ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அமைச்சர் துறையில் கவனம் செலுத்தாதன் விளைவே தாழ்த்தப்பட்ட ஜாதி என கேட்கப்படுவது. இது கண்டனத்திற்குரிய செயல். புத்திசாலித்தனமான அரசாக இல்லாமல் புத்திக்கெட்ட அரசாக திமுக உள்ளது. கட்சியில் இருந்து மாறிமாறி உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வத்தின் லெட்டர் பேடை பார்த்தீர்களா. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு அது. 2021ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் மனம் வருந்தி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
உறுப்பினர்களை நீக்குவதற்கான அதிகாரம் எங்களுக்குதான் உள்ளது. எள்ளி நகையாடக்கூடிய வகையில் உள்ளது ஓ.பன்னீர்செல்வத்தின் செயல். அது கேலிக்கூத்தான காமெடி. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும். அவரை நீக்கும்போது கூட பொங்கவில்லை. பையனை நீக்கியவுடன் வெடித்துவிட்டார். ரவீந்திரநாத் நீக்கத்திற்கு முரசொலி கட்டுரை காரணமா?.. என்ற கேள்விக்கு, யாரும் சொல்லித்தந்து செயல்பட வேண்டிய அவசியமில்லை என்றார். ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட முன்வந்தால்…? என்ற கேள்விக்கு இந்த நேரத்தில் எதுவும் கூறமுடியாது. நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? என்றார்.
-ம.பவித்ரா








