ஜவான் படத்தின் முன்னோட்டம் சர்வதேச தரத்தில் இருக்கிறது. அட்லியின் கடின உழைப்பும் பொறுமையும் இதில் நன்றாக தெரிகிறது என இயக்குனர் விக்னேஷ் பாராட்டியுள்ளார்.
‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் பாலிவுட் படங்கள் வெற்றி பெறாத நிலையில், ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘ஜவான்’ படத்தின் ட்ரெயிலரை டாம் க்ரூஸ் நடிப்பில் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்’ ஹாலிவுட் படத்துடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ட்ரெய்லருக்கு முன்பாக ‘ஜவான்’ படத்தின் ஒரு சிறிய முன்னோட்டத்தை (Prevue) படக்குழு வெளியிட்டது. இந்த முன்னோட்டத்தில் ரெய்லரில் உள்ள சில காட்சித் துணுக்குகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகும் இத்திரைப்படம் செப்டம்பர் 7-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஜவான் படத்தின் முன்னோட்டம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது, “பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்திலேயே சிறப்பாக பணியாற்றி இருக்கும் அட்லியை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. ஜவான் படத்தின் முன்னோட்டம் சர்வதேச தரத்தில் இருக்கிறது! அட்லியின் கடின உழைப்பும் பொறுமையும் நன்றாக தெரிகிறது.
அட்லிக்கு எனது சார்பாக மிகுந்த பாராட்டும் அரவணைப்பும். நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமே ஷாருக்கானுடன் இருப்பது கனவு நினைவான மாதிரி உள்ளது. அனிருத் சிறப்பாக பணியாற்றியுள்ளார். விஜய் சேதுபதிக்கு எனது பாராட்டுகள்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.







