மக்கள் தொகை அதிகரிப்பு பல்வேறு நாடுகளில் பிரச்சனையென்றால் அதற்கு நேர்மாறாக மக்கள் தொகை குறைந்து வருவது ஜப்பானுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயமாக உருவெடுத்துள்ளது. இது குறித்த தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் நாடு ஜப்பான். ஆனால் மக்கள் தொகை எண்ணிக்கையை பொருத்தவரையில் ஜப்பான் 12வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் மக்கள் தொகை எண்ணிக்கையானது முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாகவே இருக்கும். ஆனால் ஜப்பானைப் பொருத்தவரை மக்கள் தொகை எண்ணிக்கையே முந்தைய ஆண்டுகளைவிட குறையும் அளவிற்கு பிறப்பு விகிதம் அங்கு குறைவாகக் காணப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2008ம் ஆண்டு ஜப்பானின் மக்கள் தொகை 12.8 கோடி ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 12.4 கோடியாக குறைந்துள்ளது. பிறநாடுகளிலிருந்து குடிபெயர்வுகளின் எண்ணிக்கையை சார்ந்திராமல் பிறப்பு, இறப்பு விகித சமநிலையை பராமரிக்க ஜப்பானில் ஒரு பெண்ணுக்கு குறைந்தது 2 குழந்தைகளாவது இருக்க வேண்டும் என்கிற சூழ்நிலையில் தற்போது ஒரு குழந்தை என்கிற அளவிலேயே பிறப்பு விகிதம் உள்ளது.
ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 8 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அதே ஆண்டு 15.8 லட்சம் பேர் இறந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இப்படி பிறப்பு, இறப்பு விகிதங்களுக்கிடையே பெரும் வித்தியாசம் இருப்பதால் ஜப்பானில் மக்கள் தொகை எண்ணிக்கை சரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதே நேரம் சராசரி வயது உலகிலேயே அதிக அளவில் இருப்பது ஜப்பானில்தான். அங்கு ஒவ்வொரு 1500 பேரிலும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒருவர் இருப்பார் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கடந்த பல தசாப்தங்களாகவே பிறப்பு விகிதம் ஜப்பானில் குறைந்து வருவதால் ஓய்வூதியத்தை எதிர்நோக்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பணியாற்றும் திறன்மிக்க இளைஞர்களின் எண்ணிக்கை சரிவு போன்ற மாற்றங்கள் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு எடுத்த புள்ளிவிபரத்தின்படி ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு உலகிலேயே அதிக செலவு ஆகும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது. இப்படி வாழ்க்கைச் செலவு அதிகம் இருப்பதால் குழந்தை பெற்றெடுத்து குடும்பத்தை விரிவாக்கம் செய்வதில் ஜப்பான் இளைஞர்கள் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததற்கு கூறப்படும் பல்வேறு காரணங்களில் இந்த காரணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், குழந்தைகள் நலன் தொடர்பான வசதிகளை அளிக்கும் மையங்கள் போதிய அளவில் இல்லாததும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜப்பானில் இதே வேகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டேயிலிருந்தால், ஜப்பான் என்கிற ஒரு நாடே காணாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ ஹிஷிதாவின் ஆலோசகரும் ஜப்பான் எம்.பியுமான மசாகோ மோரி. இதையடுத்து குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்களில் ஜப்பான் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.