தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் போட்டியின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
- இது குறித்த அறிவிப்பில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்ட குழு அமைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும். ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவுடன் கூட்டம் நடத்தி விதிமுறைகளை விளக்கி அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், பதிவுசெய்யப்பட்ட காளைகளின் பட்டியல் ஆகியவற்றின் நகல்களை வழங்க வேண்டும்.
- வருவாய் கோட்டாட்சியரின் குழு ஜல்லிக்கட்டு நிகழ்விடத்தை ஆய்வு செய்து போதுமான இடவசதி உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும், பார்வையாளர்களுக்கும், காளைகளுக்கும் இடையில் 8 அடி உயரமுள்ள இரட்டை தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- கால்நடை பராமரிப்புத் துறை போதுமான அளவு கால்நடை மருத்துவ குழுவினை நிறுத்த வேண்டும். காளைகள் அனைத்தும் கட்டாயமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவை உள்நாட்டின காளைகள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், மேலும் சோர்வாக, நிதானமின்றி உள்ள காளைகளை அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக காளைகள் மது வெறியூட்டப்பட்டுள்ளனவா என ஆராய்ந்து மது வெறியூட்டப்பட்ட காளைகளை அனுமதிக்கக்கூடாது. கால்நடை அவசர மருத்துவ ஊர்தி தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
- மக்கள் நல்வாழ்வுத் துறை போட்டியாளர்களுக்கு உடல் தகுதி பரிசோதனைகளை செய்ய வேண்டும், மது போதையில் இருப்பவர்களை கண்டிப்பாக நீக்க வேண்டும். காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவும், அவசர மருத்துவ ஊர்தியும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
- பொதுப்பணித்துறையினர் பார்வையாளர்களுக்கும், காளைகளுக்கும் இடையில் 8 அடி உயரமுள்ள இரட்டை தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து சான்றளிக்க வேண்டும்.
- காவல் துறையினர் போதுமான அளவு காவலர்களை பணியில் அமர்த்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வண்ணம் பாதுகாக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா கொண்டு பார்வையிட்டு விதிமீறல்கள் விலங்குகள் துன்புறுத்தல்கள் நடக்காத வண்ணம் காக்கவேண்டும்.
- தீயணைப்புத்துறையினர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். விலங்குகள் மீட்பில் பயிற்சி பெற்ற வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.
- ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முறையாக விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற்று உரிய அரசுத்துறைகளுடன் ஒத்துழைத்து மேற்கூறப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








