”ஜல்லிக்கட்டு தடை இல்லை என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஒன்று ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது.
விரிவாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். கோடை விடுமுறை வரும் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ள நிலையில் இன்று ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோஹி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பினை வாசித்தது.
இந்த விவகாரத்தில் எங்களுக்கு அனுப்பப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதை நாங்கள் ஏற்கிறோம. ஜல்லிக்கட்டு தொடர்பாக எங்களுக்கு கொடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.
ஜல்லிக்கட்டு பாரம்பரியம், கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்தது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றினைந்தது என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு சட்டம் காளைகளுக்கு ஏற்படும் கொடுமையை பெரும்பான்மையாக குறைத்துள்ளது. கலாச்சாரம் என்ற வகையில் இருந்தாலும் கூட அதில் துன்புறுத்தல் என்று வரும் பொழுது அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை, தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
” தமிழர் தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.
தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை… pic.twitter.com/u4Saep26DK
— M.K.Stalin (@mkstalin) May 18, 2023
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







