ஜெய் பீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக, 2D நிறுவனத்தின் CEO ராஜசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி ”ஜெய்பீம்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூர்யாவின் ’2D எண்டர்டெய்ன்மெண்ட்’ நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்தது. பல்வேறு விமர்சனங்களைப் பெற்ற இப்படம் பெரும் வெற்றி பெற்றது. ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜொமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இருளர் இன மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை விளக்கும் வகையில், உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இது கோவாவில் நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழா, 12வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா என உலக அளவில் பல்வேறு திரையரங்குகளிலும் விழாக்களிலும் திரையிடப்பட்டது. ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2D நிறுவனத்தின் CEO ராஜசேகர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.







