கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுற்றுலா…

கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான இங்கு ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வரும். கொடைக்கானலில் கால நிலைக்கு ஏற்ப பல்வேறு வகையிலான மலர்கள் பூத்து குலுங்கும் .

 

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் கோடைக்காலம் வரவிருப்பதை அறிவிக்கும் வகையில், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஜெகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளன. கோடை காலங்களில் மட்டுமே இந்த மலர்கள் பூக்கும். குளிர்காலத்தில் மரங்களில் உள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்த நிலையில், கோடைக்காலம் துவங்கும் இந்த மார்ச் மாதத்தில் மரங்கள் அனைத்திலும் ஜெகரண்டா மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்குகின்றன.

ஜெகரண்டா மிமோசி போலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாவண்டர் நீல நிற பூக்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் பூத்துள்ளன. குறிப்பாக பெருமாள்மலை சாலையில் அதிக அளவில் பூத்துள்ளது . இந்த ஜெகரண்டா மலர்கள் மரங்களில் மட்டுமே பூக்கக்கூடிய வகையைச் சேர்ந்தது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தும் வருகின்றனர் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.