‘சலார்’ படத்தில் ஜெகபதி பாபுவின் ராஜமன்னார் என்ற வில்லனாக நடிக்கிறார். அவருடைய கேரக்டர் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘கே ஜி எஃப்’ மற்றும் ‘கே ஜி எஃப்: சாப்டர் 2’ படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் படம், ’சலார்’. இந்தப் படத்தை கே.ஜி.எப், கே.ஜி.எஃப் 2 படங்களை இயக்கியுள்ள பிரசாந்த் நீல் இயக்குகிறார்.
பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் ஹீரோயின். ஆக்ஷன் அட்வென்ஞ்சர் திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, ராஜ மன்னார் என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். அவருடைய கேரக்டர் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
’சலார் படத்தில் ராஜமன்னார் கேரக்டர், கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் லுக் போஸ்டர், ‘சலார்’ படத்தைப் பற்றிய எதிர் பார்ப்பை ரசிகர்களிடத்தில் நிச்சயம் ஏற்படுத்தும். படத்தின் 20% படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. பாக்கி படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் கூறும்போது, ‘சலார் படத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில கேரக்டர்கள் லுக், படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் வெளியிடப்படும்’ என்றார்.








