ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 300 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி. இங்கு கடந்த 14ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவானது. ஹைதி தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 12,268 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளை இழந்த பலரும் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால், சுமார் ஒரு லட்சம் வீடுகள் சேதமடைந் துள்ளன. 30 ஆயிரம் குடும்பங்கள் வீடிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹைதி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,207 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 344 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளனது. இதனால், பலி எண் ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.








