மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் மிகப் பழமையான சைவத் திருமடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த
மடத்தின் 292-வது ஆதீனமான அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்.
அருணகிரிநாதர் உயிருடன் இருந்தபோதே இளைய ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் இன்று காலை 293-வது மதுரை ஆதீனமாக அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி, திருவாவடுதுறை, குன்றக்குடி, கோவை காமாட்சிபுரி ஆதீனம்
உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள், பங்கேற்றனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து பக்தர்களுக்கு
புதிய ஆதீனம் ஆசி வழங்கினார். இதைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில்
நடக்கும் சிறப்பு வழிபாட்டில் ஹரிஹர சுவாமிகள் பங்கேற்கிறார்.
1980-க்குப் பிறகு நடக்கும் இந்த பட்டம் சூட்டும் விழாவையொட்டி புதிய ஆதீனத்தை சிறப்புப் பல்லக்கில் அமர வைத்து, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள சித்திரை வீதி யில் ஊர்வலமாக சுற்றும் நிகழ்வு இன்று இரவு நடைபெறுகிறது.








