சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக இருப்பதாக பிரபல நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் பிறந்தவர் நடிகர் ஜாக்கி சான். அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். காமெடி கலந்த அவருடைய ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். திரைப்பட இயக்குநராகவும் உள்ள ஜாக்கிசானுக்கு இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைப் படுத்தியது. இதற்கு ஹாங்காகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடிகர் ஜாக்கி சான் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். இதனால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஜாக்கிசான் இப்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சீன திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் நடிகர் ஜாக்கிசான், பல வருடங் களாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.
அவர் கூறும்போது, கடந்த சில வருடங்களில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பிற நாடுகளுக்குச் செல்லும்போது நேரடியாக உணர்ந்திருக்கிறேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். கொடுத்த வாக்குறுதிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அக்கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அந்தக் கட்சியின் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது.







