“ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கையை அமைத்தவர் மு.கருணாநிதி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கையை அமைத்தவர் மு.கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் ‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்’ இன்றும், நாளையும் (ஜூன் 27,28) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. முன்னதாக இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும், அதனுடன் சிறப்பு மலரை வெளியிட்டார். அப்போது அவர் மேடையில் கூறியதாவது,

“ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கம். எழுத்தாளர்களை தமிழ் சமூகம் என்றும் கொண்டாட தவறியதே இல்லை. எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும். 36 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு வீடு வழங்க வேண்டும் என முடிவு செய்து கனவு இல்லம் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 கோடி மதிப்பில் வீடு வழங்கப்பட்டது. 15 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.