சந்திரசேகரின் அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நிறைவு!

முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணிக்கு நெருக்கமானவரும், அதிமுக பிரமுகரான வடவள்ளி சந்திரசேகரின் வீடு மற்றும் கேசிபி நிறுவன அலுவலகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை நிறைவடைந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்…

முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணிக்கு நெருக்கமானவரும், அதிமுக பிரமுகரான வடவள்ளி சந்திரசேகரின் வீடு மற்றும் கேசிபி நிறுவன அலுவலகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை நிறைவடைந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், அதிமுக எம்ஜிஆர்
அணியின் முக்கிய நிர்வாகியுமானவர் வடவள்ளி சந்திரசேகர். இவர் அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும், கேசிபி என்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். சந்திரசேகர் அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் மாநகராட்சிப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு பலகோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் எடுத்து அதன் மூலம் பல்வேறு பணிகளை செய்து கொடுத்து வந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் சோதனைகளில் இரண்டு முறை சோதனைகளுக்கு உள்ளானவர் வடவள்ளி சந்திரசேகர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சந்திரசேகரின் வீடு மற்றும் அலுவலகம் உள்பட 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியான சோதனை நடத்தினர்.

வடவள்ளி பகுதியிலுள்ள சந்திர சேகர் வீடு உட்பட ஆறு இடங்களில், நேற்று முன்தினம் முற்பகல் 11 மணிக்குத் துவங்கிய சோதனை நள்ளிரவு 12.45 மணிக்கு
நிறைவடைந்தது. இந்நிலையில், வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக நேற்றும் சந்திரசேகர் அலுவலகம் மற்றும் கேசிபி நிறுவன அலுவலகத்தில் சோதனையை அதிகாரிகள் தொடர்ந்து நடத்தினர்.  பீளமேடு பகுதியில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து நடைபெற்ற சோதனை இன்று அதிகாலை 3 மணி அளவில் நிறைவுபெற்றது. வரி ஏய்ப்பு தொடர்பாக பல ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளதாக வருமானத் துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.