தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (tnpl) டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து திண்டுக்கல் அணி விளையாடியது. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்களை எடுத்தது.
மோகித் ஹரிஹரன் மட்டும் 43 ரன்களை எடுத்தார். அந்த அணியில் பிற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். சன்னி சாந்து 3 விக்கெட்டுகளையும், சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட மதுரை பாந்தர்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 41 ரன்களிலும், விக்னேஷ் ஐயர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாலசந்தர் அனிருத், அரை சதம் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கேப்டன் சதுர்வேத் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மதுரை அணியின் பாலசந்தர் அனிருத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இது மதுரை அணிக்கு 3வது வெற்றியாகும். இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி, நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் தோல்வியைத் தழுவியுள்ளது. 6 புள்ளிகளுடன் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது மதுரை அணி.
8 புள்ளிகளுடன் தோல்வியே காணாமல் நெல்லை அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்








