முரசொலி என்னை விமர்சிப்பது முதல்முறை அல்ல – நியூஸ் 7 தமிழுக்கு டி.கே.ரெங்கராஜன் பிரத்யேக பேட்டி!

திமுக நாளேடான முரசொலி என்னை விமர்சிப்பது ஒன்றும் முதல் முறையல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.ரெங்கராஜன் தெரிவித்துள்ளார். 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் தொழிலாளர்…

திமுக நாளேடான முரசொலி என்னை விமர்சிப்பது ஒன்றும் முதல் முறையல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்.

12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் தொழிலாளர் திருத்தச் சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரெங்கராஜன் செய்த விமர்சனம் குறித்து தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, திமுக நாளிதழான முரசொலியில் இன்று ‘சி.பி.எம் கட்சியைத் தவறாக வழி நடத்துவது யார்?’ என்ற தலைப்பில், பதிலடி கொடுக்கும் விதமாக கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளது.

அதில் மக்களாட்சியின் மாண்பையும், ஜனநாயகத்தின் குரலையும் மதித்து தொழிலாளர் திருத்த சட்டத்தை உடனடியாக இரண்டு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்ப பெற்றுவிட்டதாக முரசொலி தெரிவித்துள்ளது.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.ரெங்கராஜன், தமிழ்நாட்டை திமுக அரசு ஆட்சி செய்கிறதா ? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என்று வினவியிருப்பதற்கு முரசொலி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே ரெங்கராஜனுக்கு சொன்னது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள முரசொலி, கூட்டணியில் இருந்து கொண்டு பொதுவெளியில் கூக்குரலிடுவது தான் கூட்டணி தர்மமா ? என வினவியுள்ள முரசொலி, திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால் என்று சொல்லும் தகுதி டி.கே.ரெங்கராஜன் போன்றோருக்கு இல்லை என்றும் காட்டமாக சாடியுள்ளது.

இது குறித்து டி.கே.ரெங்கராஜனிடம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘’ நான் பேசிய கருத்து தீக்கதிரில் பதிவாகியுள்ளது. அதற்கு முரசொலியில் விமர்சனம் செய்துள்ளனர். இத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது. அவர்கள் என்னை விமர்சனம் செய்வது முதல் முறையல்ல. பல முறை விமர்சனம் செய்துள்ளனர். என்னுடைய கருத்துகள், அதன் மீதான விமர்சனம் குறித்து நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கருத்து சொல்வார். நான் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை. உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் இடத்தில் நான் இல்லை’ என்று கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.