ரூ.2000 நோட்டுக்கள் வாபஸ் பெற்றது இதற்காக தான் – சித்தராமையா கண்டனம்!

ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். 2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம்…

ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.

2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் ரூபாய் நோட்டு புழக்கத்திற்கான தேவையை கருத்தில் கொண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகள்  அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதாலும், போதுமான அளவுக்கு மற்ற ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாலும் 2018 – 19ம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. தற்போது ரூ.2,000 நோட்டுகளின் பயன்பாடு மக்களிடையே பெருமளவில் குறைந்துவிட்டது.

இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. அத்தகைய நோட்டுகள் செப்டம்பா் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும், அதுவரை அவற்றை வழக்கமான பணப் பரிவா்த்தனையில் தொடா்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. 2016 டிசம்பரில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போதே காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வந்த நிலையில், இன்று 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடகாவில் இன்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறுகையில், “பிரதமர் மோடியால் மீண்டும் ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி. ரூ.2000 நோட்டை இப்போது நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது என்றால், 2016-ல் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? தங்கள் கொள்கைகளிலேயே தெளிவில்லாமல் இருக்கும் ஒரே ஆட்சி பாஜக ஆட்சி.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.