காலத்திற்கும் அழியாத படத்தில் நானும் பணியாற்றியிருப்பது பெருமையாக
இருக்கிறது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற நாவல் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் அதன் 2வது பாகம் ஏப்ரல் 28ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின்
2வது பாகம் திரையரங்குகளில் வெளியானது. குறிப்பாக சென்னை காசி திரையரங்கம் மற்றும் ரோகிணி திரையரங்கம் ஆகியவற்றில் காலை முதலே ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடத் தொடங்கினர். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள காசி திரையரங்கில் நடிகர் கார்த்தி நேரில் வந்து ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்தார். அவர் வருவதையொட்டி ரசிகர்கள் சார்பாக பெரிய அளவிலான கட்டவுட் வைக்கப்பட்டு பாலபிஷேகம் செய்யப்பட்டது.
நான்கு குதிரைகள் சூழ ஜெண்ட மேளம் வாத்தியங்களுடன் காலை 9 மணிக்கு வெளியான
திரைப்படத்தை பார்க்க நடிகர் கார்த்தி வருகை புரிந்தார். மேலும் முழு திரைப்படத்தையும் ரசிகர்களுடன் திரையரங்கில் உட்கார்ந்து பார்த்தார் நடிகர் கார்த்தி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, எல்லோருடனும் அமர்ந்து படத்தைப் பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. காலத்திற்கும் அழியாத படத்தில் நானும் பணியாற்றி உள்ளேன் என்பது பெருமையாக இருக்கிறது. படம் பார்த்து முடிந்த பிறகும் அந்த உணர்வு இன்னும் போகவில்லை. அதனால் சரியாக பேசக்கூட முடியவில்லை என்றார்.
படத்தை பார்ப்பதற்கு முன்னர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர்.







