தெலுங்கு சினிமாவின் ஜாம்பவானான என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த உள்ளிட்ட திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் போல ஆந்திரத்தில் தெலுங்கு சினிமாவின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நந்தமுரி தாரக்க ராமாராவ் எனும் N.T.ராமா ராவ். சினிமாவில் ஈடு இணைற்ற அசாத்திய நடிப்புத் திறமையால் இந்திய அளவில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர்.
என்.டி.ராமாராவ் சினிமாவில் மட்டுமல்ல ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் அரசியலிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். 1950ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கிய என்.டி.ஆர் இந்து மத கடவுள்களின் வேடத்தில் நடித்ததின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். இதன் பின்னர் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தீவிர அரசியலில் ஈடுபட நினைத்த என்.டி.ஆர் மக்களை சந்திக்க முடிவு செய்தார். அதற்காக தனது வாகனத்தை பிரத்யேகமாக வடிவமைத்து அதற்கு ”சைதன்ய ரதம்” என பெயரிட்டார். கிட்டத்தட்ட ஆந்திர மாநிலம் முழுவதும் 75,000 கிமீ சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணம் அவருக்கு கை கொடுத்தது.
1986ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் என்.டி.ராமாராவ் 202 இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றார். இதன் மூலம் முதல் முறையாக ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் ஆனார். சுதந்திர பெற்றதில் இருந்து ஆந்திராவில் காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சர் இவர்தான்.
கிட்டதட்ட மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த என்.டி.ராமாராவ் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராவார். அமெரிக்காவில் எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என்.டி.ராமாராவ் தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , என்.டி.ராமாராவ் மருமகனும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திர பாபு நாயுடு மற்றும் நடிகரும் என்.டி.ராமாராவின் மகனுமாகிய பாலகிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.







