ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று முன்தினம் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து பேசிய பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சர்,“ இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பாலஸ்தீனர்கள் உட்பட 9 குழந்தைகள் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் தரைமட்டமாக்கப்பட்டது.
மேலும் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாகவும், யூதர்களால் போற்றப்படும் அல் அக்சா மசூதியில் இஸ்ரேலின் போலீசார் மசூதியைத் தாக்கி, ரப்பர் தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலின் போலீசார் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். அதில் கேரளாவைச் சேர்ந்த இந்தியப் பெண் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இதனையடுத்து பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் இஸ்ரே ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ஜோனாதன் கார்னிகஸ் கூறுகையில், “பாலஸ்தீன கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் உள்ள 130 ராணுவ முகாம்களைத் தாக்கி அழித்துள்ளோம். இதில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
மசூதியில் தொழுகையில் ஈடுபடும் நபர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்படவேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.
கடந்த வாரம் முதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே வான்வழித் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த மோதல் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தைக் கூட்டியது. அந்த கூட்டத்தில் இரு நாடுகளும் உடனடியாக வான்வழித் தாக்குதலை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் பாகிஸ்தானின் பிரதமர் , நாங்கள் காசா மற்றும் பலஸ்தீனுக்கு ஆதரவாக நிற்கிறோம்” என்று குறிப்பிட்டதோடு மேலும் அவர் அமெரிக்க ஏகாதிபத்திய பற்றி நோம் சோம்ஸ்கி-யின் போர் குறித்த மேற்கோளை அவர் பகிர்ந்துள்ளார்.







