காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழப்பு…..!

போா்நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையே, காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைதி ஒப்பந்தம் வாயிலாக இஸ்ரேல் – ஹாமாஸ் இடையே போர் நிறுத்தம் நிலவி வருகிறது. ஆனால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகமானது, சனிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர். இது கடந்த இரண்டு மாதங்களில் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையாகும். உயிரிழந்தவர்களில் பெண்களும் ஆறு குழந்தைகளும் அடங்குவர். மேலும் இத்தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

அதே நேரம் இஸ்ரேல் பாதுகாப்புப் படையானது (IDF) “கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு ரஃபாவின் நிலத்தடி பயங்கரவாத உள்கட்டமைப்பிலிருந்து எட்டு பயங்கரவாதிகள் வெளியேறுவது அடையாளம் காணப்பட்டனர். இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். இதனை தொடர்ந்து காசா பகுதி முழுவதும் உள்ள ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது என தெரிவித்தது. மேலும் வெள்ளிக்கிழமை மூன்று போராளிகளைக் கொன்றதாகவும், ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.