வான்வழி தாக்குதலில் ஹமாஸ் நிதியமைச்சர் பலி : இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் நிதியமைச்சர் ஜவாத் அபு ஷமாலா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 100க்கும் மேற்பட்ட வீரர்கள் உட்பட 900க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஹமாஸின்…

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் நிதியமைச்சர் ஜவாத் அபு ஷமாலா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை 100க்கும் மேற்பட்ட வீரர்கள் உட்பட 900க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஹமாஸின் தாக்குதல்களுக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. காசாவில் 100 முதல் 150 பேர் வரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஹமாஸ் தலைமையிலான பாலஸ்தீனிய எல்லைக்குள் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். 4,250 காயம் அடைந்தனர். இதனையடுத்து காஷா தங்கள் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளதாக அறிவித்த இஸ்ரேல், எரிபொருள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது. மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஹமாஸ் படையை முற்றிலும் அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என பிரதமர் பிஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் ஜவாத் அபு ஷமாலா உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த ஜவாத் அபு ஷமாலா, ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“பொதுமக்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களைப் பறித்து அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் முற்றுகைகளை சுமத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் ஜெனீவாவில் தெரிவித்தார். இதனிடையே மேலும் ஒரு அமைச்சர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.