அரசியலுக்கு வர ஆயத்தமாகிறாரா விஜய்? நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு!

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு தொகுதியின் விவரங்கள் அடங்கிய படிவம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் நேரடி அரசியலில் வர ஆயத்தமாகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை…

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு தொகுதியின் விவரங்கள் அடங்கிய படிவம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் நேரடி அரசியலில் வர ஆயத்தமாகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். மேலும் அந்த இயக்கத்திற்கு புஸ்ஸி என்.ஆனந்தை பொதுச்செயலாளராகவும் நியமித்திருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி அடைந்தனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி செயல்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார்.அம்பேத்கர் பிறந்தநாள் அன்று ஒவ்வொரு ஊர்களிலும் அவரது சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குறிப்பாக புஸ்ஸி என்.ஆனந்த் விக்கிரவாண்டியில் நடைபெற்ற விழாவில் அரசியல் கட்சியினருக்கு இணையாக ஊர்வலமாக சென்று அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கு படிவம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தொகுதியின் முக்கிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
தொகுதியில் உள்ள 10 முக்கிய பகுதிகள், தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் பெயர் மற்றும் தொழில், தொகுதியில் இரண்டு நபர்கள் நியமிக்க பெயர் மற்றும் தொடர்பு விபரங்கள், மொத்த பூத் எண்ணிக்கை, பூத் உறுப்பினர்கள் முழுமையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா?, அணி தலைவர் பெயர் மற்றும் பொறுப்பு, எத்தனை வார்டுகளில் நிர்வாகிகள் செயலாளர், பொருளாளர், இணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் விஜய் நேரடி அரசியலில் ஈடுபட உள்ளரா என்பது குறித்த கேள்விகளை நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளங்களில் கேட்டு வருகின்றனர். விஜய் இந்த நடவடிக்கைகள் அவர் அரசியலில் ஈடுபடப்போவதை தான் கூறுகிறது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.