“கூட்டணிக்காக நீதி பலிகடாவா?” – வானதி ஸ்ரீநிவாசன் கேள்வி!

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரில் கைது நடவடிக்கை தேவையில்லை எனக் கூறிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீநிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீநிவாசன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரில் கைது நடவடிக்கை தேவையில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது! ஏற்கனவே மாணிக்கம் தாகூர் அவர்கள் முன்னதாக ஆதரவுக் குரல் கொடுத்த நிலையில், தற்போது மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யும் களமிறங்கியிருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதைவிட, கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதில்தான் காங்கிரஸ் அதிக அக்கறை காட்டுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

பெண்களின் கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!

இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக ஒட்டுமொத்த கட்சியின் சுயமரியாதையையும் அடகு வைத்து, தவெக-வின் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுப்பதுதான் தமிழக காங்கிரஸின் அரசியலா? பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக நின்று நீதி பெற்றுத் தருவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. மாறாக, கைது நடவடிக்கை கூடாது என்று முன்கூட்டியே வக்காலத்து வாங்குவது அல்ல! கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைச் சட்டமும், காவல்துறையும், நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும். ஆனால், புகாரின் தீவிரத்தைச் சிறுமைப்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் நீதிக்கான குரலை அரசியல் காரணங்களுக்காக நசுக்க முயல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.

அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும்!

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் போன்று நாளை இன்னொருவர் உருவாகக் கூடாது என்பதற்காகவே கைது நடவடிக்கை கட்டாயம் வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கூட்டணி தர்மத்தைவிடப் பெண்களின் கண்ணியத்திற்கு முதலில் மதிப்பளித்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றத் துடிப்பதை நிறுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுங்கள் எம்.பி. கார்த்தி சிதம்பரம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.