புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையான ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார்கள் வந்ததை அடுத்த ஆலோசனை நடத்தினோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜிபம்ரில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
புற நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மருந்து இல்லை என சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முழுமையாக மருந்துகள் இலவசமாக வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் காப்பீடுத் திட்டத்தில் புதுச்சேரியை சார்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர். ஜிப்மரில் 50 கோடியில் புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளது என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.








