This News Fact Checked by ‘India Today’
ஜனவரி 29 அன்று மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச அரசு, பிரயாக்ராஜை அடையும் பக்தர்களின் கூட்டத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியது. விஐபி பாஸ்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் வசந்த பஞ்சமி அன்று மூன்றாவது “அமிர்த ஸ்னானம்” முடிந்த மறுநாளான பிப்ரவரி 4 வரை மகா கும்பமேளா பகுதி “வாகனங்கள் தடைசெய்யப்பட்ட பகுதி” என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், பிரயாக்ராஜில் ஒரு குறுகிய பாதையில் ஒரு பெரிய கூட்டம் சிக்கித் தவிப்பதைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. வீடியோவின் உள்ளே “மகா கும்பத்தின் மறுபக்கம்” என்று பதிவிடப்பட்டுள்ளது. அதன் காப்பகத்தை இங்கே காணலாம்.
இந்த காணொளி பிரயாக்ராஜிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல என்பதை உண்மைச் சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மதுராவின் பர்சானாவில் உள்ள ஸ்ரீ ராதா ராணி கோயிலுக்கு பல பக்தர்கள் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான காணொளியில் இருந்து கீஃப்ரேம்களை ரிவர்ஸ்-சேர்ச் செய்தபோது, ஜனவரி 2 தேதியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று கிடைத்தது. அந்த காணொளி பர்சானாவிலிருந்து வந்தது என்றும், அங்கு பலர் முந்தைய நாள் கூடியிருந்தனர் என்றும் அது கூறியது. எனவே, இந்த காணொளி ஜனவரி 13 அன்று தொடங்கிய மகாகும்பத்திற்கு முந்தையது என்பது தெளிவாகிறது.
மேலும் தேடல்கள் ஜனவரி 1-ம் தேதி கேள்விக்குரிய வீடியோவைப் பகிர்ந்த மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவை கண்டறிய உதவியது. “ராதாரணிபர்சனா” என்ற கணக்கு, ஸ்ரீ.ஜி.பர்சனா மண்டல் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தும் ஆன்மீக மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளரான ஷியாம் சுந்தர் கோஸ்வாமிக்கு சொந்தமானது. பர்சனா உத்தரபிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பின்னர் கோஸ்வாமியின் பேஸ்புக் கணக்கில் ஜனவரி 1ம் தேதி நேரடி ஒளிபரப்பு கிடைத்தது. அதில் புத்தாண்டு தினத்தன்று பர்சானாவில் உள்ள ஸ்ரீ ராதா ராணி கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வருவதையும், அதற்குச் செல்லும் பாதைகளில் நெரிசல் ஏற்படுவதையும் காட்டியது.
சுமார் 2 நிமிடங்களுக்குப் பிறகு, கோஸ்வாமி ஒரு குறுகிய பாதையை அடைந்தனர். இந்தப் பாதையின் ஒரு முனையில் எஃகு தண்டவாளத்துடன் கூடிய படிக்கட்டு இருந்தது, மறுமுனையில் “ஜூட்டா கர்” (ஷூ பேங்க்) என்று எழுதப்பட்ட பலகையைக் காண முடிந்தது. இந்த 2 விஷயங்களையும் வைரலான வீடியோவில் காணலாம். 2 கிளிப்களுக்கும் இடையிலான ஒப்பீட்டை கீழே காணலாம்.
ஜனவரி 1ம் தேதி பர்சானாவில் உள்ள கோயிலைச் சுற்றி ஒரு பெரிய கூட்டத்தைக் காட்டும் அதே இடத்திலிருந்து பிற காணொளிகளும் கிடைத்தன.
பின்னர் ஷ்யாம் சுந்தர் கோஸ்வாமியைத் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோது, அந்த காணொளி மகா கும்பமேளாவின் போது எடுக்கப்பட்டது அல்ல என உறுதிப்படுத்தினர். இது பர்சானாவில் உள்ள ஸ்ரீ ராதா ராணி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுக்கு அருகில் படமாக்கப்பட்டது.
எனவே, பர்சானாவில் நெரிசலான குறுகிய பாதையின் காணொளி, மகா கும்பமேளா காட்சியாக தவறாகப் பகிரப்பட்டது தெளிவாகிறது.









