முக்கியச் செய்திகள்தமிழகம்

5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடாதது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் 5 மாதங்கள் நிறைவடைந்தும், இதுவரை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கல்வி சார்ந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023-ம் ஆண்டுக்கான திட்டத்தில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்படும்; வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதமும், 6553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிவிப்பு மார்ச் மாதமும் வெளியிடப்படும்; பட்டதாரி ஆசிரியர்கள் 3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு மே மாதமும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மே மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஒரு அறிவிப்பு கூட வெளியாகவில்லை.

மார்ச் மாதம் வரை வெளியிடப்பட வேண்டிய ஆள்தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படாததைச் சுட்டிக் காட்டி கடந்த ஏப்ரல் 28-ம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அப்போதைய பொறுப்புத் தலைவர் நந்தகுமார், மே மாதத்தில் ஆசிரியர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அவர் மாற்றப்பட்டு, முழு நேரத் தலைவர் நியமிக்கப்பட்ட பிறகும் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியம் 2023-ம் ஆண்டில் மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 15,149 பேரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருந்தது. அவர்களில் 5 வகையான பணிகளுக்கு 14,656 பேரை, அதாவது 97% பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்புகள் மே மாதத்திற்குள்ளாக வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் என சுமார் 11,000 பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான தொடக்கக்கட்ட பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்றால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா அல்லது உறங்குகிறதா?

அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை கடந்த சில ஆண்டுகளாகவே நிரப்பப்படாததால் கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து ஒரு வாரத்திற்குள் அரசு பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஏற்பாடுகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை என்றால் நடப்பாண்டும் பற்றாக்குறை ஆசிரியர்களுடன் தான் அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்பட வேண்டும். அப்படியானால் கல்வித்தரம் எவ்வாறு உயரும்?

தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டிற்கு பிறகு அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2013-14-ம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித்தரத்தை உயர்த்துவோம் என்பது நகைச்சுவையாகவே இருக்கும்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே கல்வித் தரத்தை உயர்த்த முடியும். தமிழ்நாட்டில் 3800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன. தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் ஒரு லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு இணையாகக் கூட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது தமிழ்நாட்டு அரசு பள்ளிகளின் கல்விச்சூழலை சீரழிக்கும்.

சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியை மேம்படுத்த முடியாது. இந்த அடிப்படையை உணர்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் என்பது தகுதித்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள், பகுதி நேர மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.”

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

காவிரி -குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் முதல்வர்

Jeba Arul Robinson

குலசையில் இன்று சூரசம்ஹாரம் – நியூஸ் 7 தமிழ், பக்தி யூடியூப் சேனலில் நேரலை

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading