ரயில் பயணத்தில் RAC முறை ரத்தாகிறதா? ரயில்வே ஆலோசனை!

RAC டிக்கெட்டில் பயணிக்கும் இரண்டு பயணிகளுக்கு ஒரே படுக்கை ஒதுக்கப்பட்டு, பாதி இடம் மட்டுமே கிடைத்தாலும் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அந்த முறையை ரத்து செய்வது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

ரயில் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் RAC (Reservation Against Cancellation) முறையை நீக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. RAC முறையின் கீழ், ஒரே படுக்கை இரண்டு பயணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு பயணிக்கும் பாதி படுக்கை இடம் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், இருவரிடமும் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகளின் வசதி தொடர்பான கவலைகள் மற்றும் பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

முழுக் கட்டணம் வசூலிப்பது நியாயமா?

“ஒரு பயணிக்குப் போதுமான படுக்கை இடம் கிடைக்காத நிலையில், அவரிடம் முழுக் கட்டணம் வசூலிப்பது சரியானதாக இருக்காது என்ற கருத்து நிலவுகிறது” என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே இருக்கை ஆண் மற்றும் பெண் பயணிகளுக்கு ஒதுக்கப்படும்போதும் RAC முறை அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழல்களில் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதில் ரயில் டிக்கெட் பரிசோதகர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

நாடாளுமன்றக் குழுவும் கேள்வி

RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளிடம் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த பிரச்சினை நாடாளுமன்றக் குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முறையான படுக்கை வசதி கிடைக்காத நிலையில், பயணிகளிடம் முழுக் கட்டணம் வசூலிப்பதற்கான நியாயம் என்ன என்று அந்தக் குழு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பயணிகளுக்கு முறையான படுக்கை வசதி கிடைக்காமல் முழுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாத வகையில், தற்போதைய நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது RAC முறை?

ரயில் டிக்கெட் முன்பதிவுகள் பெரும்பாலும் கையால் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் RAC முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, டிக்கெட் ரத்துகளை உடனுக்குடன் கண்காணிக்கவும், காலியாகும் படுக்கைகளைக் கண்டறியவும் மின்னணு வசதிகள் கிடையாது. இதனால், ஒரே படுக்கையில் இரண்டு பயணிகள் பயணம் செய்யும் வகையில் இந்த ஏற்பாடு உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில், அவர்களில் ஒருவர் தனது டிக்கெட்டை ரத்து செய்தால், மற்றொரு பயணிக்கு முழுமையான படுக்கை வசதி கிடைக்கும் வாய்ப்பும் இருந்தது. தற்போது பயணிகளின் வசதி மற்றும் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள RAC முறையை ரத்து செய்வது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.