எனக்கு மட்டும் பதவியா….? – எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி. வேலுமணி அதிருப்தி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி. வேலுமணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளை வெற்றி பெற்றது. ஆனால் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியில் உட்கட்சி மோதல் உண்டாகி இபிஎஸ் அணி – எஸ்.பி. வேலுமணி அணி என கட்சி இரண்டாக பிரிந்தது.

கட்சி கொறடா நியமனம், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் இது பூதாகரமானது. இரு தரப்பினரும் சபாநாயகரிடம் புகார் கடிதங்களை வழங்கினர். எஸ்.பி.வேலுமணி தரப்பில் 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, உடனடியாக புதிய மாவட்ட செயலாளர்களை பழனிசாமி நியமித்தார்.

ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் மீண்டும் அணிகள் இணைந்தன.

இதற்கிடையில் 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவிர மற்றவர்கள் தவெகவில் இணைந்து விட்டனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையையடுத்து கட்சியில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டது. எஸ்.பி.வேலுமணிக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி .

ஆனால் எஸ்.பி. வேலுமணி தரப்பில் பதவி பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு மீண்டும் அதே பதவியை கொடுக்காமல், அதிகாரமில்லாத மாநில பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நிர்வாகிகளிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர், தன்னை நம்பி வந்த 30 மாவட்டசெயலாளர்களுக்கு பதவி பறிக்கப்பட்டுள்ளது. சி.வி.சண்முகம்,எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரெல்லாம் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள். நான் மட்டும் எப்படி துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.