தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, சி.வி.சண்முகம் & எஸ்.பி. வேலுமணி தரப்பு என இரு அணிகளாக பிரிந்தது.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றசாட்டுகளை சுமத்தினர். மேலும் சட்டமன்றத்தில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 எம் எல் ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் 4 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 25 எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இச்சந்திப்பின் போது பறித்த கட்சி பதவிகளை மீண்டும் வழங்குவது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்டமன்றத்தில் அளித்த கோரிக்கை திரும்பப் பெறுதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரம் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியில் இல்லத்திற்கு செல்லவில்லை என்பது குறிப்படத்தக்கது.







