முடிவுக்கு வருகிறதா அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு? – நாளை தீர்ப்பு வழங்குகிறது  உச்சநீதிமன்றம்

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால் அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி  எழுந்துள்ளது.  கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி,…

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால் அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி  எழுந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கியதும்,  அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வாதங்களை எடுத்துரைத்தார். பின்னர் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று பிற்பகலில் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதங்களை முன்வைத்தார்.  அ.தி.மு.க.வில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே இ.பி.எஸ் தரப்பு தான் எனக் கூறிய ரஞ்சித்குமார்,  அவ்வாறு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை உருவாக்கியதற்கு பின்னர், கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் முறையாக சென்று கொண்டிருந்த நிலையில்,
திடீரென கட்சியில் குழப்பங்களை விளைவிக்கும் வகையில் அந்த இரண்டு பதவிகளையும் நீக்க வேண்டும் என்று சொல்வதும் இபிஎஸ் தரப்புதான் எனக் குற்றம்சாட்டினார்.

 ”ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளும் காலாவதியாகும்போது அடுத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஏற்கனவே நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டும், மேலும், தேர்தல் நடத்தப்பட்டு தான் இரு பதவிகளும் நிரப்பப்பட வேண்டும் என்பதும் அதிமுகவின் விதிமுறை” என்று ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

“அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளும் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருந்தது. ஆனால் அப்போது தேர்தலில் மற்ற எவரும் போட்டியிடவில்லை என்பதால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  ஜூலை11 பொதுக்குழு முடிவுகளை எப்படி எதிர்க்க முடியும் என இவர்கள் கேட்கிறார்கள். அந்த விவகாரம் அனைத்தும் காலாவதியாகிவிட்டது என இ.பி.எஸ் தரப்பு சொல்கிறார்கள் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதிலிருந்து தான் அனைத்து பிரச்சினைகளும் தொடங்கியது.

அண்மை செய்திகள்: ஹாலிவுட் திரைப்படத்தை பார்த்து வங்கி கொல்லையில் ஈடுபட்டவர் கைது!

பொதுக்குழு கூட்டுவது தொடர்பான நோட்டீசை முன்கூட்டியே வழங்கவில்லை. வழங்கப்பட்ட நோட்டீஸிலும் இடம்பெறாத விஷயங்களை எல்லாம் அ.தி.மு.க பொதுகுழுவில் இவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். இதற்கு முன்பு கூட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு நோட்டீஸ்கள் எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.ஜூலை 11 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதம். அடிப்படை உறுப்பினர்களால் தான் உயர்மட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை எக்காலத்திலும் மாற்ற முடியாத விதிமுறை” என ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

“இடைக்கால பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதற்காக மூத்த தலைவரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.ஆனால் நீக்கப்படுவதற்கு முன்னர் விளக்கம் கேட்டு எந்த நோட்டீசும் கொடுக்கப்படவில்லை. மேலும் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற விவகாரம் தான் கட்சியின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த சூழலை யார் ஏற்படுத்தியது என்றால் , அது இ.பி.எஸ் தான்” என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அப்போது நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்புக்கு சில கேள்விகளை எழுப்பினர்.

அப்போது பரபரப்பாக வாதங்கள் சென்றது. பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.