தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “புதிய அரசியல்”, “ஊழலற்ற நிர்வாகம்” என்று மேடைகளில் சினிமாப் பாணியில் வசனம் பேசி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய், தலைமையிலான தவெகவின் உண்மை முகம், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்குத் தவெக பெண் எம்.எல்.ஏ. குழந்தை ராணி அவர்கள் 20% கமிஷன் கேட்டு ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாகவும், அப்பணிகளைத் தவெக நிர்வாகிகளுக்கே தாரைவார்க்க முடிவெடுத்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியாயம் கேட்கச் சென்ற ஒப்பந்ததாரர்களை அவமானப்படுத்தி விரட்டியடித்துள்ள இந்த ’20 சதவீதக் கமிஷன் மாடல்’தான் ஜோசப் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரும் மாற்றமா?
உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக இடைவெளியைப் பயன்படுத்தி, மற்ற ஒப்பந்ததாரர்களைப் புறக்கணித்துத் தவெக எம்.எல்.ஏ-க்களும் நிர்வாகிகளும் கமிஷன் வசூலில் ஈடுபடுவது அப்பட்டமான விதிமீறல். “ஊழலை ஒருபோதும் சகிக்க மாட்டோம்” என முழங்கிய ஜோசப் விஜய், சிவகங்கைத் தவெக பெண் எம்எல்ஏ மீதான 20% கமிஷன் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவரது தொடர் மௌனம் இந்தப் பகற்கொள்ளைக்குத் தலைமை தரும் சம்மதமா?
கிராமப்புற வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கும் மக்களின் வரிப்பணத்தில் 20% கமிஷன் வசூலிக்கும் தவெக எம்.எல்.ஏ. மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்குப்பதிவு செய்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். ஜனநாயக முறையில் டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவெக அரசு இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், வரும் காலங்களில் தமிழக மக்கள் அவர்களை முற்றிலும் புறக்கணிப்பார்கள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




