ஒரே நாடு , ஒரே தேர்தல் தொடர்பாக விவாதம் நடந்து வரும் நிலையில், மாநில அரசுகளின் பதவிக்காலம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் வரவேண்டும் என கூறி வருகிறார். இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பரிந்துரைகள் வழங்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
ஒரே நாடு , ஒரே தேர்தல் திட்டத்தில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரைக்கும் அறிக்கைகள் முன்வைத்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு இறுதிக்குள் மிஜோரம், சத்தீஸ்கா், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்குத் தோதல் நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரப்பிரதேசம், அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டு இறுதியில் ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜாாக்கண்ட் மாநில பேரவைகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்தத் தோ்தல்கள் அனைத்தும் மக்களவைத் தோ்தலோடு ஒருங்கிணைந்து நடத்தப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி, பீகார் அரசுகளின் சட்டப் பேரவை பதவி காலம் 2025ஆம் ஆண்டு முடிவடைகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளம் அரசுகளில் பதவிக்காலம் மே, 2026-ம் ஆண்டு நிறைவு பெறுகிறது.
கோவா, மணிப்பூா், பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், குஜராத், ஹிமாசலப் பிரதேச அரசுகளின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு முடிகிறது
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடக அரசுகளின் பதவிக்காலம் 2028ஆம் ஆண்டு முடிவது குறிப்பிடத்தக்கது.







