சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்த இஸ்ரோ அடுத்ததாக சூரியனைப் பற்றி ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இன்று விண்ணில் ஏவுகிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்…
புவிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனில் இருந்து எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிய பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. பெரிய அளவிலான சூரியப் புயல்கள் சூரியனின் மேல்பரப்பில் இருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ந்து உமிழப்படுகின்றன.
அது போன்ற சூரியப் புயல்கள் பூமியை தாக்கினால் அதனுடைய தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை ஆரம்பகட்டத்திலேயே அடையாளம் காண ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் விண்கலத்தை ஏவ உள்ளது.
சூரியன் மற்றும் பூமியின் மையப்பகுதியான லெக்ரேஞ்சியன் பாயிண்ட் ஒன் -ஐ மையமாக கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதால் இந்த திட்டத்திற்கு ஆதித்யா எல்1 என பெயரிடப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நான்கு கருவிகள் சூரியனை பார்த்துக் கொண்டே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் மூலக்கூறு மாற்றங்கள், அங்கு வெப்பம் உருவாகும் வழிமுறை, சூரியனைச் சுற்றியுள்ள காந்தப்புலம், அவற்றின் இயக்கவியல் போன்ற விஷயங்களை ஆய்வு செய்யும் கருவிகள் ஆதித்யா எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. சூரியனின் காந்தப்புலன்கள் பூமியில் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் மின் கட்டுமானத்தைப் பாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதால் இந்த ஆய்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக்கலம் தான் இதுவரை சூரியனுக்கு மிக அருகில் ஆய்வு செய்திருக்கும் விண்கலமாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இஸ்ரோ மூலம் விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனைப் பற்றியும் சூரியப் புயல்களை பற்றியும் தகவல்களையும் கண்டறிந்து இஸ்ரோவுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.







