நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்டநாட்களாக மேலாளராக இருந்தவர், அவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே அவரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைககளில் மிக முக்கியமானவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்டி என்ற கன்னட திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்றார். கீதா கோவிந்தம் படத்தினை தொடர்ந்து தெலுங்கில் இதே ஆண்டில் செல்லோ, தேவதாஸ் ஆகிய படங்களிலும் நடித்தவருக்கு இந்த மூன்று படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த கனவு நாயகியாகவும் மாறினார். இதனையடுத்து ராஷ்மிகா தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படங்களில் அறிமுகமானவர், பின்னர் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் , நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்ப காலக்கட்டதிலிருந்து நீண்ட நாட்களாக தனக்கு மேலாளராக இருந்தவர், அவரிடம் ரூ.80 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாகவும், இப்படியான செயலில் ஈடுபட்டதை அறிந்ததும், அவரை பணியிலிருந்து உடனடியாக நீக்கி நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதுகுறித்து யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது இந்த தகவல் தவறானது மற்றும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று ராஷ்மிகா மந்தனாவின் நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ராஷ்மிகா மந்தனா தற்போது தனது வரவிருக்கும் புதிய படங்களின் படப்பிடிப்புகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நீண்ட காலமாக ராஷ்மிகாவுடன் பயணித்தவர் என்ற முறையிலும், சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இருவரும் இனி ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ராஷ்மிகா மந்தனா தனது மேலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா