உசிலம்பட்டியில் மர்மமான முறையில் பெண்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் உடற்கூறாய்வு பணி நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி – பாண்டிச் செல்வி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது குழந்தையாக பிறந்த பிரியதர்ஷினி என்ற 7 மாத பெண் குழந்தை, கடந்த மார்ச் மாதம் தண்ணீரில் விழுந்து உயிரிழந்தாக கூறி மறைமுகமாக புதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண் குழந்தையின் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கிராம நிர்வாக அதிகாரி முத்துமணி அளித்த புகாரின் பேரில் விக்கிரமக்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
இன்று உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர் கண்ணாத்தாள் முன்னிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிவக்குமார், ராதாமணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 5 வருடங்களில் அதிக பெண் சிசுக்கொலையானது உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த பிரச்சனையை 1994ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா கருத்தம்மா என்ற திரைப்படம் மூலம் கூறியதையடுத்து, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. எனவே வழக்கு பெண் சிசு கொலையா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.







