அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரட்டைத் தலைமைகளாக கட்சியை வழிநடத்த தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவருக்கும் வழங்கும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், காலச்சூழலுக்கு ஏற்ப அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை தேவை என கட்சி நிர்வாகிகள் பலர் வெளிப்படையாகவே பேசினார். இதனயைடுத்து பரபரப்பு, சலசலப்புடன் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. இதில் ஒற்றைத் தலைமை குறித்தும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல்கள் எழுந்தன. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.
இதனால் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக இன்று தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவருடைய ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், மோகன், வளர்மதி, ஆர் பி உதயகுமார், எம் ஆர் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை முடிந்து அதிமுக தலைமை நிலையத்தில் நடக்க உள்ள கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்றைய கூட்டம் செல்லுமா செல்லாதா என்ற கேள்விக்கு, தலைமை கழகம்தான் சொல்லும் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை இன்றைய கூட்டம் சிறப்பாக நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் வருகின்ற 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும், அதில் நிறைவேற்றப்படுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதேபோல அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்தக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நடைபெறுவதால் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








