11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு-90.07% பேர் தேர்ச்சி!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்…

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி
பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படித்த
மாணவர்களுக்கு கடந்த மே 10 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. பொதுத் தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in , http://www.dge.tn.gov.in ,
http://www.dge1.tn.gov.in , http://www.dge2.tn.gov.in என்ற இணையதளங்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.

8,43,675 பேர் தேர்வை எழுதியதில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்,
தேர்ச்சி சதவீதம் 90.07% ஆக இருப்பதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது. 3,48,243 மாணவர்கள், 4,11,612 மாணவியர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவியர் 10.13% பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,535 பள்ளிகளில் 2,605 பள்ளிகள் 100% தேர்ச்சியை உறுதி செய்துள்ளதாகவும், அவற்றில் 103 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டம் 95.56% தேர்ச்சியுடன் முதலிடத்தையும், 95.44%
தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் 2ஆம் இடத்தையும், 95.25% தேர்ச்சியுடன்
மதுரை மாவட்டம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. அறிவியல் பாடப்பிரிவில் 93.73% பேரும், வணிகவியல் பிரிவில் 85.73% பேரும், கலைப் பிரிவில் 72.49% பேரும், தொழிற்பாடப் பிரிவில் 76.15% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இயற்பியல் பாடத்தில் 714 பேர், வேதியியலில் 138, உயிரியலில் 383, கணிதத்தில்
215, தாவரவியலில் 3, விலங்கியலில் 16, கணினி அறிவியலில் 873, வணிகவியலில் 821,
கணக்குப் பதிவியலில் 2,163 பேரும், பொருளியலில் 637, கணினிப் பயன்பாடுகளில்
2,186, வணிகக் கணிதம் & புள்ளியியலில் 291 பேர் 100% மதிப்பெண்களைப்
பெற்றுள்ளனர். 4,470 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதியதில் 3,898 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  99 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தேர்ச்சி சதவீதம் பெருமளவில் குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.04% ஆக இருந்த
தேர்ச்சி விகிதம், இந்தமுறை 90.07% ஆக குறைந்துள்ளதாகவும், 2020ஆம் ஆண்டில் 10,677 பேர் பொதுத் தேர்வை எழுதாத நிலையில், இந்தமுறை 41,376 பேர் பொதுத் தேர்வை எழுதவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வை எழுதாத மாணவர்கள், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற உள்ளதாகவும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த 2021-22ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கு பொதுத் முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் தற்போது 12ஆம் வகுப்பில் படித்து வருவதால் அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.