கவின் நடிப்பில் வெளியாகியுள்ள டாடா திரைப்படத்தை குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதனை தொடர்ந்து, திரைப் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், டாடா திரைப்படத்தின் பிரீமியர் காட்சி பிப்.8ம் தேதி காட்சிப்படுத்தப்பட்டது.
அம்பேத் குமார் தயாரிப்பில், கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், பாக்யராஜ், ஐஸ்வர்யா, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் டாடா படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யாவுக்கு மகனாக கவின் நடித்துள்ளார். பெற்றோரின் பேச்சை கேட்காத, சரியாக படிக்காத கவின் கல்லூரியில் அபர்ணா தாஸ்-ஐ காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அபர்ணா கர்ப்பமாகிறார். அந்த கர்ப்பத்தை கவின் கலைக்கச் சொல்லியும் அபர்ணா அவரது பேச்சைக் கேட்காததால், ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர்.
திருமணம் ஆன பின்னும் ஊதாறிதனமாக சுற்றுகிறார் கவின். குடிப்பது, மனைவியை புரிந்து கொள்ளாமல் கோபப்படுவது என எடக்குமுடக்கான வேலைகளை செய்கிறார் கவின். ஒரு முறை நீ செத்திரு என அபர்ணாவை வார்த்தைகளால் காயப்படுத்துகிறார். இந்நிலையில், அபர்ணா பிரசவ வேதனையில் கால் செய்யும் போது போன்-ஐ கட் செய்கிறார் கவின். அன்றைய தினமே ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், அந்த குழந்தை மருத்துவமனையில் தனியாக இருக்கிறது, அபர்ணாவை காணவில்லை.
அபர்ணா குழந்தையை விட்டு விட்டு பெற்றோருடன் சென்றுவிடுகிறார். குடும்பத்துடன் அபர்ணா வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். எனவே, தன்னுடைய அம்மாவிடம் (ஐஸ்வர்யா) குழந்தையை கவனிக்க உதவி கேட்கிறார் கவின். ஏற்கனவே, அப்பாவிற்கும் (பாக்யராஜ்) மகனுக்கும் பிரச்னை உள்ளதால் கவினை தன் வீட்டுற்குள் சேர்க்கவில்லை. ஐஸ்வர்யாவையும் கவினுடன் அனுப்பவில்லை.
இதனால் ஆத்திரமடைந்து குழந்தையை ஆசிரமத்தில் சேர்க்க செல்கிறார் கவின். ஆனால் மனமில்லாமல் குழந்தையை தானே வளர்க்க முற்படுகிறார். கவின், குழந்தைக்காக தனது பழக்க வழக்கத்தை மாற்றுகிறாரா? அபர்ணாவின் நிலை என்ன? அபர்ணாவுக்கு 2வது திருமணம் நடைபெற்றதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
குணச்சித்திர நடிகர் விடிவி கணேஷ், இப்படத்தில் கவினுக்கு அறிவுரை கூறுவது போல் நடித்துள்ளார். கவினின் மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ஆத்விக்கின் சிரிப்பும், நடிப்பும் அருமை. துணைக் கதாப்பாத்திரங்களாக வரும் பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் ஆகியோர் மனதில் நிற்கின்றனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் மனதைக் கவரும் ரகம். சாண்டி மாஸ்டர் படத்திற்கு நடனம் அமைத்திருந்தாலும், ஒரு பாடலுக்கு சாண்டி மாஸ்டரும், கவினும் நடனமாடுகின்றனர். அந்த நடனம் திரையை ஒரு கலக்கு கலக்குகிறது.
இசையமைப்பாளர் ஜென் மார்டினுக்கு அப்லாஸ். பொதுவாக அப்பா – மகள் பாசம் வொர்க்அவுட் ஆகும். ஆனால், இந்த படத்தில் அப்பா – மகன் பாசம் வொர்க் அவுட் ஆகியிருக்கு. என்னால எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க முடியும் என நிரூபித்து காட்டியிருக்கிறார் கவின். அபர்ணாவின் நடிப்பும் இயல்பாக இருந்தது.
டாடா படத்தின் கதை இதுவாக தான் இருக்கும் என கெஸ் செய்தாலும் நகைச்சுவையான பேச்சுகள், எமோசன் சீன்கள் மூலம் படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ கிடைக்கிறது. இந்த படத்தை குடும்பத்தோட போய் பார்க்கலாம். வீக் எண்டுக்கு கிடைத்த ஒரு ஸ்ட்ராங்கான படம். இந்த படத்தில் சென்டிமெண்ட் வேணுமா சென்டிமெண்ட் இருக்கு, காதல் வேணுமா காதல் இருக்கு, Fun வேணுமா Fun இருக்கு. சந்தோசமா வீக்கெண்ட என்ஜாய் பன்னுங்க.
– சுஷ்மா சுரேஷ்







