சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது புகார் மனுக்கள் குறித்தும், கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலை நேரடியாக ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைய துறை சார்பில் விசாரணை குழுவை நியமித்தது. இந்த குழு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடராஜர் கோயிலுக்கு சென்று அங்குள்ள தீட்சிதர்களை சந்தித்து விசாரணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கோயில் நிர்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என்றும், சட்டப்படி அணுகும்படி தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டது. மேலும் விசாரணைக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால், விசாரணை குழுவினர் திரும்பி சென்றனர்.
இரண்டு நாட்கள் ஆய்வுக்கு சென்றும் தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால், இந்த விவகாரம் குறித்து மற்ற அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை விசாரணை குழுவினர் தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வு சம்பந்தமான அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும், அடுத்தகட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சபாநாயகர் கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33-ன் படி ஆணையாரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம், கோயில் மீது அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
வருகிற 20 மற்றும் 21-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. மேலும் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரி vocud.hrce@tn.gov.in மூலமாகவும் 21-ம் தேதி மாலை 3 மணிக்குள் அனுப்பலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்








