ப்ராஜெக்ட் ப்ளூ திட்டத்தின் கீழ் விரைவில் பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரை மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அழகு படுத்தப்படும் என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே சென்னையை சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மாநகரமாக மாற்றும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து உர்பேசர் சுமீட் நிறுவனம் மறுசுழற்சி மறுபயன்பாடு என்ற வகையில் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது. மக்கள் பங்களிப்போடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இதற்கான முன்னெடுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மக்கும் மக்காத குப்பைகள் சரியாக தரம் பிரிப்பது மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மறு சுழற்சி மறுபயன்பாடு என்ற வகையில் விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் செயல்படுகிறது. சென்னையை சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மாநகரமாக மாற்றும் வகையில் உர்பேசர் சுமீட் நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் மகேஷ்குமார், தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் நேற்று மட்டும் கூடுதலாக 3000 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
ப்ராஜெக்ட் ப்ளூ திட்டத்தின் கீழ் விரைவில் பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரை மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அழகு படுத்தப்படும் என மகேஷ்குமார் உறுதியளித்தார். ஆக்கிரமிப்புகள் தொடர்பான புகார்கள் மாநகராட்சிக்கு வந்தால் அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
– இரா.நம்பிராஜன்







