அலை கடல் தாலாட்டும் மெரினா, ஆங்காகே ஓடி கொண்டு இருக்கும் மக்கள் கூட்டம் என எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சிங்கார சென்னையை, நிலைகுலைய செய்தது கடந்த 2015 பெருவெள்ளம். அதில் இருந்தே, நாம் கடலோர மாவட்டத்தில் இருக்கிறோம் – இங்கு மழை காலங்களில் மழை பெய்வது இயல்பு தான் என்பதை கூட மறந்துவிட்டனர் சென்னை வாழ் மக்கள்.
பெருவெள்ளம் வந்து சென்று 6 ஆண்டுகளை கடந்தாலும் தொடர் மழை என்றாலே ஏரிகள் நிரம்பிவிடும், சென்னை மூழ்கிவிடும் என்கிற வார்த்தைகள் இன்னும் ஏதோ ஒரு மூலையில் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், 2015ம் ஆண்டை போல் நடப்பாண்டில் சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லை என்பதே வானிலை ஆய்வாளர்களின் பதில்.
2015ம் ஆண்டு பெருமளவு வெள்ளம் ஏற்பட, எது காரணியாக அமைந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தாலே இப்போது வெள்ளம் வருமா? இல்லையா என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கூட மிகவும் குறைவு தான். அதேபோல சென்னையில் கடந்தவாரம் பெய்த மழையைபோல் 2015 நவம்பரில் 10 நாட்களுக்குள் ஏறத்தாழ 50 செ.மீ அதிகமாக மழை பதிவாகியிருந்தது.
நவம்பர் மாதத்தில் மட்டும் 12 நாட்கள் 5 செண்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிவு இருந்தது.ஆண்டின் சராசரி மழை பொழிவு முழுவதும் மழை துவங்கிய ஒன்பதே நாட்களில் கொட்டி தீர்த்தது.தீவிர மழையை ஏற்படுத்தும் “மேடன் ஜூலியன் ஆஸிலேஷன்” என்னும் எம்.ஜெ.ஓ (MJO) என்கிற காரணி 20 நாட்கள் சாதகமாக இருந்ததால் இடைவிடாது பெருமழை பெய்தது.
மழை காலங்களில் தினமும் மழை பெய்தாலும் கூட வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
ஒரு சில நாட்களில், அதிகப்படியான மழை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் கொட்டித் தீர்ப்பது தான், இந்த அளவிற்கு பெருவெள்ளம் ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த ஆண்டு கடுமையான மழையை ஏற்படுத்தும் எம்.ஜே.ஓ ( MJO) காரணி பெரிய அளவில் இல்லை என்பதால், அதி கனமழை நீண்ட நாட்கள் தொடராது என்று உறுதிப்பட கூறுகின்றனர் வானிலை ஆர்வலர்கள்.









