முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

ஆப்ரேஷன் தாமரை : மகாராஷ்ட்ராவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறதா பாஜக?


மரிய ரீகன் சாமிக்கண்ணு

மத்தியபிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக எப்படி அரியணை ஏறியது என்பதை அறிந்தவர்களுக்கு மகாராஷ்ட்ர அரசியலில் என்ன நடக்கிறது என்பது புரியவரும். தற்போது, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் சூரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளார். ஆம், ரெசாட் அரசியல் தான் தற்போது மகாராஷ்ட்ராவில் நடக்கிறது.

மகாராஷ்ட்ரா பேரவை நிலவரம்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

288 எம்.எல்.ஏக்கள் கொண்ட மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆளும் சிவசேனாவிற்கு 55 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சியின் 44 எம்.எல்.ஏக்கள், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 51 எம்.எல்.ஏக்களும், இவர்களுடன் இதர கட்சிகளின் 29 எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டரா சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். இந்த பின்னணியில் தான், சமீபத்தில், மகாராஷ்ட்ரா சட்ட மேலவைக்கு மொத்தம் 10 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக சார்பில் 4 பேர் போட்டியிட்டால் போதும். ஆனால், சிவசேனாவுக்கு செக் வைப்பதற்காக பாஜக 5 பேரைக் களம் இறக்கியது. பாஜக வியூகத்திற்கு கைமேல் பலன் கிடைக்கும் வகையில், பாஜகவின் 5 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். இது, ஆளும் சிவசேனா கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்தது. மாநிலங்களவைத் தேர்தலில் இதே போன்ற எதிர்பாராத ஒரு வெற்றியை சிவசேனாவிடம் இருந்து பாஜக தட்டிப்பறித்தது. அதாவது, மாநிலங்களவை தேர்தல் வெற்றி, சட்ட மேலவைத் தேர்தல் வெற்றி, இதன் தொடர்ச்சியாக தற்போது, மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவைக் கொண்டு சிவசேனா அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது பாஜக. இங்கு தான், சிவசேனாவை ஏன் வீழ்த்த நினைக்கிறது பாஜக என்பதற்கான கதையை அடுத்து பார்க்க வேண்டியிருக்கிறது.

பாஜக – சிவசேனா உறவு முறிந்த கதை:

மகராஷ்ட்ரா அரசியலில் நிறத்தாலும் குணத்தாலும் ஒன்றாகவே இருந்த சகோதரர்கள் தான் சிவசேனா – பாஜக கட்சிகள். 2019ல் நடந்த சட்டமன்ற தேர்தலில்,சிவசேனா – பாஜக அமைத்த கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்று, மொத்தம் இருந்த 288 தொகுதிகளில், 161 எம்.எல்.ஏக்களுடன் அரியணை ஏற தயாரானது. துணை முதலமைச்சர் பதவியும், சில முக்கிய துறைகளில் சிவசேனா எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவியையும் கேட்டு உத்தவ் தாக்கரே ஒரு பட்டியலை தேவேந்திர பட்னாவிசிடம் நீட்டினார். அதற்கு பாஜக உடன்படாததால், தேர்தலுக்கு பிறகு சிவசேனா – பாஜக உறவு முறிந்தது. இருப்பினும், ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மிகநெருங்கிய உறவினரான அஜித் பவாரை கையில் எடுத்து ரெசாட் அரசியல் மூலம், தேவேந்திர பட்னாவிஸ் அரியணை ஏறினார்.

தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசியலில் தான், சாணக்கியன் என்பதை நிரூபிக்கும் வகையில், செயல்பட்ட சரத் பவார், பாஜக கூடாரத்தில் இருந்த அஜித் பவாரை தனது பக்கம் இழுத்து, பாஜகவின் ஆட்சியை 3 நாளிலேயே முடிவுக்கு கொண்டு வந்தார். ஆம், 2019 நவம்பர் 23 ஆம் தேதி முதலமைச்சராக அரியணை ஏறிய தேவேந்திர பட்னாவிஸ், 29 ஆம் தேதி அரியணையில் இருந்து இறக்கப்பட்டார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஃபார்முலாவை கையில் எடுத்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. சிவசேனா ஆட்சியைக் கவிழ்க்க பாஜக பல வகையிலும் முயன்றதாக கூறப்பட்டது. ஆனால், எந்த முயற்சிக்கும் கைமேல் பலன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் கர்நாடகா, மத்தியப்பிரதேச ஃபார்முலாவை கையில் எடுத்தது பாஜக. அது என்ன ஃபார்முலா?

கர்நாடாக, மத்தியபிரதேச ஃபார்முலாவை கையில் எடுத்த பாஜக:

மகாராஷ்ட்ராவில் தற்போது நடக்கும் அரசியல் போலவே, சில ஆண்டுகளுக்கு முன்பு மத்தியபிரதேசம், கர்நாடகாவிலும் ஒரு அரசியல் சதுரங்கம் நடந்தது. கர்நாடகாவில் 105க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலும் கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதாளம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. சில மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள உறுப்பினர்கள் ராஜிநாமா செய்த எம்எல்ஏக்களில் 10 பேர் மும்பைக்கு சென்று அங்கிருந்த ரிசாட் ஒன்றில் தங்கினார்கள். அவர்களை சமாதானப்படுத்த மும்பைக்கு சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே சிவகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எல்லா அஸ்திரங்களும் தோல்வி அடைந்த பிறகு கர்நாடகாவில் ஆட்சியை இழந்தது காங்,. – மஜத கூட்டணி. அடுத்த சில நாட்களிலேயே காங்,. மூத்த தலைவர் சிவகுமார் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடைபெற்று, அவர் அலைக்கழிக்கப்பட்டார். இதே போலவே, மத்திய பிரதேச அரசியலும் ஒரு சூழல் நிலவியது.
ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவாளர்களிடன் பாஜகவில் தஞ்சம் அடைந்து மத்திய பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்த்தார். மத்திய பிரதேச முதலமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, 2020 மார்ச் மாதம் பிரதமர் மோடியை சந்தித்தார். அதே தினம், தனது ராஜினாமா கடித்தத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அளித்தார். ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்ததுடன், அவரது ஆதரவாளர்கள் 21 பேரும் தங்களின் ராஜினாமா கடித்தத்தை அளுநருக்கு அனுப்பினர். இதனால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, மத்திய பிரதேச முதலமைச்சராக சிவராஜ் சிங் சௌகான் மீண்டும் பதவியேற்றார்.

மகாராஷ்ட்ராவில் மீண்டும் பாஜக ஆட்சி?:

2019 நவம்பரில் நள்ளிரவில் அரியணை ஏறி 3 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜக 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அரியணை ஏறும் சூழல் உருவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஹிண்டே 22க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுடன் நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளார். ஏக்நாத் ஹிண்டே முடிவால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
55 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிவசேனாவில், 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் விலகினால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அதற்கும் குறைந்தால், மட்டுமே சிவசேனாவால் கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்.

மகாராஷ்ட்ராவில் பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சிவசேனா மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் குஜராத்தின் சூரத் ரெசார்ட்டில் உள்ளனர். இவர்கள் அணி மாறினால், அல்லது ஆதரவை விலக்கி தனித்து செயல்படத் தொடங்கினால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். மகாராஷ்ட்ராவில், உள்ள சிவசேனா எம்.எல்.ஏக்கள் 22க்கும் மேற்பட்டோர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. அதே போல், சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளதால், மகாராஷ்ட்ராவில் அடுத்து பாஜக அரியணை ஏறுவது ஏறக்குறையை இறுதி செய்யப்பட்டுவிட்டது. கடந்த காலங்களில் மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் ஆளும் அரசுகளை கவிழ்த்தது போல இப்போது மகாராஷ்டிராவிலும் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து அரியணை ஏறப்போவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிப் 7ம் தேதி சென்னை வருகிறார் சசிகலா!

Niruban Chakkaaravarthi

கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!

“அதிமுக சாதி, மதம் சாராத கட்சி” – முதல்வர் பழனிசாமி!

Jayapriya