சேலம் அருகே இரிடியம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் கிழக்கத்திக் காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ராதாகிருஷ்ணன். இவர், ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஓமலூர் சக்கரை செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கவுண்டர் மகன் ராஜி என்பவர் தன்னிடம் இரிடியம் உள்ளது என்று கூறியும் அதற்கு ரூபாய் 10 லட்சம் கொடுத்தால் இரண்டு மாதம் கழித்து 20 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல ஓமலூர் வட்டக்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மகன் ராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தாத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்த வில்வேந்திரன், தன்னிடம் இரிடியம் மாயக்கற்கள், திமிங்கல வாந்தி ஆகிய பொருட்கள் உள்ளதாகவும், மேலும் வெளிநாட்டில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் கணக்கில் வராத பணம் பல கோடி உள்ளதாகவும் அதை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கும் குறைந்த அளவில் வரி செலுத்த வேண்டும் எனவும் அதற்கான பணத்தை கொடுத்தால் இரண்டு மடங்கு பணம் கொடுப்பதாக கூறி ஏமாற்றி மோசடி செய்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டதால், ராஜி மற்றும் வில்வேந்திரனை சேலம் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்ற காவலுக்கு ஓமலூர் போலீசார் அனுப்பி விட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு அம்மன் பஞ்சலோக சிலைகள், 4 மான் கொம்புகள், திமிங்கலம் வாந்தி, கலிபோர்னியம் கல் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதுபோன்று இரிடியம், ரைஸ் புல்லிங், மண்ணுளி பாம்பு, பணம் இரட்டிப்பு போன்ற விஷயங்களில் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.








