டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி போராடி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா , டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர்.
டெல்லி அணியில் தொடக்க வீரரான பிரித்வி ஷா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் அதிர்ச்சிகரமாக வெளியேறினார். இதன் பின்னர் டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆடிய நிலையில் மணிஷ் பாண்டே 26 ரன்களில் அடுத்ததாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதற்கு அடுத்த வந்த டெல்லி அணியின் வீரர்களான யாஷ் துல் , ரோவேமென் பவெல் , லலித் யாதவ் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வார்னர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நின்று ஆடி இருவருமே அரை சதம் அடித்தனர். இறுதியாக 19.4 ஓவர்கள் முடிவில் 10விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 172ரன்கள் எடுத்தது.
173 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்க வீரர்களான் இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென ஏறியது. அணியின் ஸ்கோர் 71 ரன்கள் இருக்கும்போது இஷான் கிஷன் 31ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் 65 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறியனர். மும்பை அணிக்கு கடைசி 3 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி 3 ஓவர்களில் டிம் டேவிட் , கேமரூன் கிரீன் ஜோடி பந்துகளை பவுண்டரி , சிக்ஸர்களுக்கு பறக்க விட்டனர். கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இறுதியாக 1 பந்துக்கு இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நெருக்கடியை மும்பை அணி எதிர் கொண்டது. டெல்லி அணியின் நோர்ஜே வீசிய கடைசி ஓவரில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து மும்பை அணி திரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.







