மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட இளம் மருத்துவர் – சாகும் முன் என்ன செய்தார் தெரியுமா..?

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவின் இளம் மருத்துவர் ஒருவர் துணிச்சலுடன் சாவைத் தழுவிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. மரணத்திற்கு முன் அவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்க்கலாம். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவின்…

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவின் இளம் மருத்துவர் ஒருவர் துணிச்சலுடன் சாவைத் தழுவிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. மரணத்திற்கு முன் அவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்க்கலாம்.

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவின் இளம் மருத்துவர் ஒருவர் துணிச்சலுடன் சாவைத் தழுவிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. அந்திய மண்ணில் நண்பர்கள் முன்னிலையில் மீளாத் துயில் கொண்ட ஹர்ஷவர்தன் என்ற அந்த மருத்துவரைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

சாகும் நாள் தெரியாத வரைதான் மனித வாழ்க்கை இன்பம் தருவதாக இருக்கும். ஆனால் இயற்கையின் இந்த விதிக்கு முற்றிலும் மாறாக தனது சாவையும் இன்முகத்தோடு வரவேற்றவர் தான் ஹர்ஷவர்தன். தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதே ஆன அவர், ஆஸ்திரேலியாவில் பொது மருத்துவராக பணியாற்றி வந்தார்.

2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு திருமணமானமானது. அதுவரை அவரது வாழ்வில் எல்லாமே இனிமையாக சென்றுகொண்டிருந்தது. பல்வேறு வண்ணக் கனவுகளுடன் இந்தியாவில் தங்கியுள்ள இளம் மனைவியை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல திட்டமிட்டபோதுதான் அவரது வாழ்க்கையில் புயல் வீசியது.

எந்த தீயப்பழக்கமும் இல்லாத அவருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கியிருப்பது 2020ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி ஹர்ஷவர்தன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பேரிடியாக அமைந்தபோதும், நிதானத்தை இழக்காத ஹர்ஷவர்தன், அடுத்தடுத்து தான் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து முடித்தார்.

அவர் தொடர் சிகிச்சைகள் பெற்றுவந்தபோதிலும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு அவரால் உயிர்வாழ முடியாது என்று மருத்துவர்களும் கைவிரித்து விட்டனர். துயரம் சூழ்ந்த நிலையிலும் இந்தியாவில் வாழும் தனது இளம் மனைவியின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அவருக்கு விவாகரத்து வழங்கிய ஹர்ஷவர்தன், அவருக்குத் தேவையான பொருளாதார வசதிகளுக்கும் ஏற்பாடு செய்தார். அத்துடன் தனக்கான சவப்பெட்டி ஒன்றை வாங்கி நண்பர்களிடம் ஒப்படைத்த அவர், தனது உடலை இந்தியாவுக்கு கொண்டுசெல்வதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளையும் செய்து முடித்தார்.

மரணத்துக்கு முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்த ஹர்ஷவர்தன், 15 நாட்கள் தனது பெற்றோருடன் தங்கியிருந்து விட்டு மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பினார். நுரையீரல் புற்றுநோயால் தாம் அனுபவிக்கும் கொடிய துன்பங்களை காணக் கூடாது என்பதற்காகவே பெற்றோரை கண்ணீர் கடலில் தள்ளிவிட்டு அவர் பிடிவாதமாக ஆஸ்திரேலியா திரும்பினார்.

ஒவ்வொரு நாளும் நோயின் வலியால் துடித்த அவர், கடந்தமாதம் 24 ஆம் தேதி தான் மரண தேவனின் கொடுங்கரங்களில் சிக்கினார். அன்று காலையில் தாங்க முடியாத வலியால் துடித்த ஹர்ஷவர்தன், சாவு தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்து நண்பர்களை எல்லாம் அழைத்தார். அவர்களுடன் சேர்ந்து காலை உணவருந்திய ஹர்ஷவர்தன், அவர்கள் முன்னிலையிலேயே சிறிது நேரத்தில் மீளாத் துயில் கொண்டார்.

அதன் பின்னர் அவர் வாங்கி வைத்திருந்த சவப்பெட்டி மூலம் சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்பட்டு கடந்த 5ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது, மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொண்டு  சாவெய்திய ஹர்ஷவர்தன் பற்றி அவரது பெற்றோர்கள் கூறிய இத்தகவல்கள் அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.