ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். 2023 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்வி…

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து இதுவரை விளையாடி வெறும் 13 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றும், 29 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை வென்று சாம்பியனானது. 17ஆவது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் தான் நடக்கும், இன்னும் அதற்கு 10 மாத காலம் உள்ளது. இருப்பினும், ஐபிஎல் குறித்த பேச்சுக்கு மட்டும் எப்போதும் ஓய்வே இல்லை.

கடந்த இரண்டு சீசன்களாக ஹைதராபாத் அணிக்கு பிரையன் லாரா தலைமைப் பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில் இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அணியில் இணைந்தார் பிரையன் லாரா. அதன்பின், இந்த ஆண்டு டாம் மூடி பார்த்து வந்த ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு லாராவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஹைதராபாத் இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பிரையன் லாராவுக்கு பதில் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெட்டோரி முன்பு 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மேலும் தற்போது அவர் ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இது தொடர்பாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நியூசிலாந்தின் அனுபவமிக்க டேனியல் வெட்டோரி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமைப் பயிற்சியாளராக ஆரஞ்சு ஆர்மியில் இணைகிறார். அவரை அணி நிர்வாகம் வரவேற்கிறது” என பதிவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.