ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் முதல் அணியாக அரையிறுதிக்கு மலேசியா அணி முன்னேறியது. முழு உடல் தகுதி மற்றும் மன வலிமையுடன் அரையிறுதி போட்டிக்கு திட்டமிடுவோம் என மலேசிய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் மலேசியா, ஜப்பான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மலேசிய அணி சிறப்பாக விளையாடி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மலேசிய அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் மலேசிய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் அருள் அந்தோணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
”இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற முதல் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்து கொரியா அணியுடனான போட்டிக்கு பிறகு, ஓய்வு நாளில் நாங்கள் முழு உடல் தகுதி மற்றும் மன வலிமை பெற்று அரையிறுதிக்கு திட்டமிடுவோம். இந்தியாவுடன் விளையாடிய 0-5 என்ற அந்த தோல்வி மிகவும் அழுத்தத்தை கொடுத்தது.
நான் வீரர்களிடம் அந்த போட்டி குறித்த நினைவுகளை மைதானத்திற்குள் எடுத்து செல்ல வேண்டாம் என்றும், இந்த போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி அறிவுறுத்தினேன். அதே போல வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தனர். அதிக கோல்கள் அடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அதனை முன்னதாகவே கோலாக மாற்ற முயற்சிக்க கூறியுள்ளோம்.
உலகின் தலை சிறந்த கோல் கீப்பர் எங்களிடம் உள்ளார். இந்தியாவில் போட்டிகளை சந்திப்பதற்கு மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு மிகுந்த ஒத்துழைப்பு நல்கியது. எங்களை சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தனர். இந்தியா கொரியா இடையேயான போட்டியை நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நிச்சயம் நான் போட்டியை பார்ப்பேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.








