ஐபிஎல் 2025 : தங்க நிற பேட்சுடன் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – புதிய ஜெர்ஸி அறிமுகம்!

‘நடப்பு சாம்பியன்’ என்பதை குறிக்கும் விதமாக ஐபிஎல் 2025 தொடரில்  தங்க நிற பேட்ஜ் அணிந்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது .

இந்தியாவில் கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்ற கிரிக்கெட் போட்டிகளைவிட ஐபிஎல் போட்டிகள் இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 18 வது சீசனானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில்,  அனைத்து அணிகளும் தற்போது இந்த தொடருக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, இம்முறை தோனிக்காக ஐபிஎல் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

அதேபோல மற்ற அணிகளும் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 2024ம் ஆண்டு போட்டியை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயஷ் ஐயர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார் . நடப்பு ஐபிஎல் போட்டிக்கான  ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் ஸ்ரேயஷ் ஆவார்.

ஸ்ரேயஷ் பஞ்சாப் அணிக்கு சென்றுள்ள நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.  இந்த நிலையில் கொல்கத்தா அணி தங்களது அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ என்பதை குறிக்கும் விதமாக ஐபிஎல் 2025 தொடரில்  தங்க நிற பேட்ஜ் அணிந்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது .
பிற அணிகள் அனைத்தும் வழக்கம்போல் வெள்ளை நிற ஐபிஎல் பேட்ஜுடன் விளையாடும். எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து இந்த நடைமுறையை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.