ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்களை குவித்தது.
டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள் : வெப்பம் கொளுத்தும் நிலையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?
இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 45வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணியின் இன்னிங்ஸை குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாஹா தொடங்கினர்.
இதையடுத்து, பெங்களூரு அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய ஸ்வப்னைல் பந்தில் சாஹா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த சுதர்சன் கேப்டன் கில்லுடன் இணைந்து ரன்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். சுப்மன் கில் தனது விக்கெட்டினை மேக்ஸ்வெல் பந்தில் இழந்தார். 19 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து களமிறங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஷாரூக் கான் ஏற்கனவே களத்தில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விரர் சாய் சுதர்சனுடன் இணைந்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை 100 ரன்களைக் கடக்க வைத்தார். ஐபிஎல் தொடரில் இதுதான் சுதர்சனின் முதல் அரைசதம் ஆகும்.
15வது ஓவரில் முகமது சிராஜ் பந்தில் ஷாரூக் கான் அவுட் ஆகி ஆட்டத்தைவிட்டு வெளியேறினார். ஷாருக்கான் மற்றும் சுதர்சன் கூட்டணி 45 பந்தில் 86 ரன்கள் சேர்த்தனர். ஷாரூக் கான் 30 பந்தில் 58 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 3 பவுண்டரியும் 5 சிக்ஸரும் அடங்கும். கடைசி சில ஓவர்களில் அதிரடியாக சிக்ஸர்களையும் ஹாட்ரிக் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார் சாய் சுதர்சன்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுளை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சுதர்சன் 49 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 84 ரன்கள் குவித்தார். இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 201 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.





